×

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்த வழக்குகளில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க ஐகோர்ட் மீண்டும் மறுப்பு: ஜூலை 13ம் தேதி இறுதி விசாரணை

சென்னை: ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டத்துக்கு எதிரான வழக்குகளில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மீண்டும் மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், ஜூலை 13ம் தேதி இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து கடந்த ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிறுவன சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளில் தமிழ்நாடு அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆன் லைன் ரம்மி விளையாட்டு நிறுவனத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி, ரம்மி திறமைக்கான விளையாட்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஏற்கனவே தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா மாநில அரசுகள் ஆன் லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்த சட்டத்தை அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்கள் ரத்து செய்துள்ளன.

தற்போது, ஆன் லைன் விளையாட்டுக்களை அதிர்ஷ்ட விளையாட்டு என்றும் அதற்கு பலர் அடிமையாகி, நிதி இழப்புகளை சந்தித்து, தற்கொலைகள் செய்து கொள்வதாக கூறி தமிழ்நாடு அரசு இச்சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தின் அடிப்படையில், கடுமையான குற்ற நடவடிக்கைகள் எடுப்பதால் இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றார். இதற்கு ஆட்சேபம் தெரிவித்த தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், இந்த வழக்கின் இறுதி விசாரணைக்கு ஒரு தேதியை நிர்ணயிக்க வேண்டும் என்றார். இதையடுத்து, வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்த நீதிபதிகள், வழக்குகளை இறுதி விசாரணைக்காக ஜூலை 13ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்த வழக்குகளில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க ஐகோர்ட் மீண்டும் மறுப்பு: ஜூலை 13ம் தேதி இறுதி விசாரணை appeared first on Dinakaran.

Tags : EC ,Chennai ,Madras High Court ,ICourt ,Dinakaran ,
× RELATED யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி